Monday 28 April 2014

தொடர் - 2

அரவிந்த் நடக்கும் குழப்பங்களை நினைத்தபடியே தன் அறைக்கு சென்றான். அங்கே முதலில் அவன் கண்ணில் பட்டது கட்டில் மீது இருந்த அந்த பொம்மை தான்.  அரவிந்த் தன் பையை ஜன்னல் வைத்தான். அப்போது ஜன்னல் வெளியே அவன் வீட்டு தெருவில் இருந்த ஒரு கருப்பு நாய் அவனையே கவனிப்பதை கண்டான். பிறகு பொம்மை பக்கம் திரும்பினான்.
“ஹலோ....பொம்மு” என்று புன்னகைத்தான். அரவிந்த்.
பொம்மையோ அதே சிரிப்பை காட்டியபடி இருந்தது.
“என்ன பாக்குற? இனிமே உன்ன நான் பொம்முனு தான் கூப்பிட போறேன்... அதவிடு.....உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்.” என்று பொம்மையின் அருகில் அமர்தான் அரவிந்த்.“
“இனிக்கு நான் ஹால் டிக்கெட்ட கொண்டு போக மறந்துட்டேன்...ஆனா யாரோ ஹால் டிக்கெட்ட கொண்டு வந்து குடுத்திட்டு போயிருக்காங்க..”
“அது மட்டும் இல்ல....என் பேக்ல யாரோ...சாக்லேட்டும் வச்சிருக்காங்க!”
“இதெல்லாம் யாரு பண்ணிருப்பாங்க பொம்மு?”
பதிலில்லை ஆனால் அரவிந்த் பொம்முவையே பார்த்தான்.
“நீ மட்டும் பேசற பொம்மையா இருந்தா எப்படி இருக்கும்.” என்று பெருமூச்சு விட்டு எழுந்து சென்ற அரவிந்த் அலமாரியை திறந்தான்.
“அரவிந்த்!......” - ஒரு இனிமையான பெண் குரல் கேட்டு திரும்பினான் அரவிந்த்.
யாரும் இல்லை கட்டிலில் அந்த பொம்மையை தவிர.
“அரவிந்த்......” என்று மீண்டும் கேட்கும் போது அரவிந்த் மனதில் பயம் எழுந்தது.
“ய..யாரது? சஞ்சய்?” என்று தன் அறையை சுற்றி தேடியபடி கேட்டான் அரவிந்த்.
“நான் பொம்மு....அரவிந்த்.” என்றது குரல்.
அரவிந்தின் பயம் அதிகமானது. மெல்ல அந்த பொம்மையின் அருகில் சென்று அதன் முகத்தை பார்த்தான். பொம்மை எப்போதும் போல தான் இருந்தது.
“நீ... நீதான பேசினது?” என்று பயத்துடன் அரவிந்த் கேட்டான்.
திடிரென பொம்மையின் முகத்தில் அசைவு தெரிந்தது. கண்கள் சிமிட்டியது. அதன் தலையும் அசைந்தது.
அரவிந்த் இதயம் வேகாமாக அடித்தது. பயத்தின் உச்சிக்கு சென்ற அரவிந்த்.
“ஆஆஆஆஆஆஆ!” என்று கத்தியபடி அங்கிருந்து ஓட ஆரம்பித்தான்.
“அரவிந்த்..பயப்படாத!...அரவிந்த்!” என்று பொம்மு குரல் கொடுத்தது.
“அம்மா! பேய்! பேய்! “ என்று கத்தியபடி அறையை விட்டு ஓடிய அரவிந்த் கால் தவறி சுவற்றில் தலையில் மோதி கிழே விழுந்தான். அவன் குரல் கேட்டு அங்கே பதறி ஓடிவந்தனர் அவன் அம்மா தேவியும் சஞ்சயும்.
“அம்மா அந்த பொம்ம...பொம்ம...”என்று அரவிந்த் மெல்ல மயக்கத்துக்கு சென்றான்.                            
                                   ***
இரவு ஆனது. அரவிந்த் கண் விழித்த போது அவன் அறையில் படுக்கையில் கிடந்தான். அவன் அருகில் அவன் அப்பா விஷ்ணு மருத்துவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பாகம் அமர்திருந்த அம்மா தேவி அரவிந்தை வருத்ததுடன் பார்த்துக்கொண்டு இருந்தார். சஞ்சய் தான் அப்பாவின் கைகளை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தான்.
அரவிந்த் தனக்கு காய்ச்சல் இருப்பதை உணர்ந்தான். அவன் உடல் இன்னும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஒன்னும் இல்ல... எதையோ பார்த்து பயந்திருக்கான்..ஒருநாள் ரெஸ்ட் எடுக்கணும்...நாளைக்கு எக்ஸாம் இருக்கா?” என்றார் மருத்துவர்.
“இல்ல ...அடுத்த எக்ஸாம்க்கு இன்னும் கொஞ்ச நாள் ஸ்டடி ஹாலிடேஸ் இருக்கு.” என்றார் விஷ்ணு.
“ஓகே...அப்ப கிளம்புறேன்! அரவிந்த் ஒன்னும் பயப்படாத...சீக்கிரம் உடம்பு சரியாகிடும்..” என்று மருத்துவர் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். விஷ்ணு அவரை வழியனுப்ப மருத்துவர் பின்னே சென்றார்.
“என்னாச்சு? அரவிந்த்....” என்று வருத்தமாக தேவி கேட்க அரவிந்த் பார்வையால் அந்த பொம்மையை தேடினான்.
“அந்த பொம்மையா..நான் வெளிய தூக்கி போட்டுடேன்....அத பார்த்துதான் பயந்தியா?” – தேவி.
அரவிந்த் எதையும் சொல்லவில்லை.
                                            ***
அன்று இரவு அரவிந்த் வீட்டு தெருவில் இருந்த அந்த  கருப்பு நாய் மெல்ல நடந்து வந்தது. அதே நேரம் குப்பை வண்டியும் தெருவில் குப்பை அள்ள வந்து கொண்டிருந்தது. அந்த நாய் அரவிந்தின் வீட்டை பார்த்தபடி தெருவை கடக்கும் போது அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் எதோ சத்தம் கேட்டு நின்றது. குப்பை தொட்டியில் ஏதோ அசைவு தெரிந்தது.
“லொள்..லொள்...” என்று நாய் குரைத்தவுடன் குப்பை தோட்டியின் அசைவு நின்றது. அந்த நாய் மெல்ல குப்பை தொட்டிப் பக்கம் சென்று அந்த தொட்டியில் குப்பையை ஆராய்ந்தது. நன்கு அது ஆராய்ந்த போது அரவிந்தின் பொம்மையை அது கவ்வியது. அந்த பொம்மை எந்த அசைவில்லாமல் இருந்தது. குப்பை வண்டி நாயின் பக்கம் இருக்கும்  குப்பை தொட்டியை நெருங்கிக் கொண்டிருந்தது.
 சிறிது நேரம் பொம்மையை கண்ட நாய் பொம்மையை தூக்கி கொண்டு மெல்ல அரவிந்தின் வீட்டினுள் நுழைந்தது. வீட்டின் பின் பக்கம் பொம்மையை போட்டுவிட்டு  அங்கிருந்து கிளம்பியது நாய்.
                                          ****


மறுநாள் காலை அரவிந்த் அறை தூக்கத்தில் இருக்கும் போது அவன் அம்மா தேவி எங்கோ தன் தம்பி சஞ்சயுடன் கிளம்புவதை கண்டான்.
“அரவிந்த்...நானும் சஞ்சயும் கோவிலுக்கு போயிட்டு வரோம்! நான் போயிட்டு வந்து உனக்கு கஷாயம் வச்சு குடுக்கறேன். சரியா? அதுவரைக்கும் நிம்மதியா தூங்கு என்ன?” என்று தேவி குரல் குடுத்து விட்டு சஞ்சையுடன் வீட்டை வீடு வெளியேறினார். அரவிந்த் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.
வீடே அமைதியாய் இருந்த அந்த சமயத்தில் “கடக் தடக் “ என சத்தம் கேட்டு கண்விழித்தான் அரவிந்த் .
அது சமையல் அறையில் இருந்து வரும் பாத்திரங்களின் சத்தம். அரவிந்த் நன்கு உறங்கி கொண்டிருந்தான். சிறிது நேரம் ஆனது.
“அரவிந்த்...அரவிந்த்..” என்று யாரோ அவனை எழுப்பினர். அரவிந்த் கண் விழித்து பார்த்த போது அதிர்ச்சி. பொம்மு அவன் பக்கம் அமர்திருந்தது.
“அம்மா அம்மா “ என்று பதறினான் அரவிந்த்.
“கத்தாதே கத்தாதே “ என்று பொம்மு அவன் அவன் வாயை தன் கைகளால் மூடியது.
“என்ன பார்த்து பயப்படாத! நான் எதுவும் பண்ணமாட்டேன். நான் பேய் இல்ல...தயவு செஞ்சு என்ன நம்பு!” என்று பொம்மு கெஞ்சியது.
அரவிந்த் சற்று அமைதி காத்தான். ஆனால் அவன் கண்ணில் நடுக்கம் இருந்தது. ஒரு பொம்மை மனிதனை போல நடந்து கொள்வது அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க வில்லை.
“இங்க வந்ததுக்கு காரணம் உனக்கு நான் யார்னு புரிய வைக்கத்தான்!” என்று வருத்ததுடன் கூறியது பொம்மு.
“நீ...நீ யாரு?” என்று மெல்ல கேட்டான் அரவிந்த்.
“சொல்றேன்! முதல்ல இந்த காஷயத்த குடி! உனக்காக நானே இத போட்டேன்.” என்று தன் கையில் வைத்திருந்த டம்பளரை அரவிந்திடம் நீட்டியது பொம்மு.
இப்போது அரவிந்துக்கு பயம் குறைந்தது. எதுவும் பேசாமல் அந்த டம்ளரை வாங்கி குடிக்க ஆரம்பித்தான். பொம்மு செய்யும் எல்லாம் விஷயமும் ஒரு சிறுமியை போல அரவிந்துக்கு தெரிந்தது.
“நான் ஒரு பொம்மைனு எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி தெரிஞ்சுது. அதை தவிர வேற எதுவும் எனக்கு நியாபகம் இல்ல!” – பொம்மு
“என்ன சொல்ற நீ யார்னு உனக்கே நியாபகம் இல்லையா?” – அரவிந்த் தயக்கத்துடன்.
“ஆமா. உன்னோட பிறந்த நாள் பரிசா என்னை பார்த்த முதல் தடவை தான் நான் சுய நினைவுக்கு வந்தேன். நான் யார்னு தெரிஞ்சுக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவப்பட்டுச்சு. அதனால தான் உன்கிட்ட இத்தனை நாள் பேசாம இருந்தேன்.” – பொம்மு
“இப்போ மட்டும் என்கிட்டே பேசுறியே?” – அரவிந்த்.
“நீதான நேத்து சொன்ன?...நான் மட்டும் பேசுற பொம்மையா இருந்தா நல்லாருக்கும்னு...அதான் பேசினேன். ஆனா நீ பயந்து என்னையே பயமுறுத்தவனு நான் நினைக்கிலை ” என்று பொம்மு கூறியவுடன் அரவிந்த் மெல்ல சிரித்தான். சட்டென அவனுக்கு எதோ நினைவுக்கு வந்தவுடன்.
“அப்படினா ...என் ரூமை ஒருநாள் சுத்தம் பண்ணது....என் ஹால் டிக்கெட்டை ஸ்கூல்ல  கொண்டு வது கொடுத்தது...என் பேக்ல சாக்லேட்டை வச்சது.. நீதானா?” – அரவிந்த்.
“ஆமா”  என்றது பொம்மு. அரவிந்த் இப்போது போம்முவை நம்ப ஆரம்பித்தான்.
“ஆனா சாக்லேட் வாங்க  உனக்கு ஏது காசு?” – அரவிந்த்.
“உன் தம்பி உண்டியலை உடைச்சுதான் காசு எடுத்தேன்! அந்த சாக்லேட் வாங்கி வர்றதுக்குள்ள நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். உன்னை புரிஞ்சிகிட்டதால தான் இதெல்லாம் செஞ்சேன்! ” – பொம்மு.
“என்னை மன்னிச்சுடு....நானும் உன்னை இப்போ புரிஞ்சுகிட்டேன் ! இனிமே நாம வழக்கம் போல நண்பர்களா இருக்கலாம்!” என்று அரவிந்த் தன் கையை நீட்ட பொம்மு அழகான சிரிப்புடன் அவனுடன் கைக்குலுக்கினாள்
“ஆமா.... குப்பை தொட்டியில்தான எங்க அம்மா உன்னை போட்டதா சொன்னாங்க?” – அரவிந்த்.
“ஆமா...ஆனா நல்ல வேலைய என்னை ஒரு நாய் காப்பாத்தி உங்க வீட்டு பின்னாடி போட்டுடுச்சு...இல்லனா என்னை குப்பை வண்டி கொண்டு போயிருக்கும்.” – பொம்மு.
“நாய் காபாத்துச்சா? “ – அரவிந்த் வியப்புடன்.
“ஆமாம்....சரி..நீ படுத்துக்கோ..நல்லா ஓய்வு எடுக்கணும்” என்று படுக்கை விட்டு கிழே குதித்தது பொம்மு.
“பொம்மு...எனக்கு தூக்கம் வரல..அந்த டிவி பட்டனை அமுக்கு..டிவி பாக்கலாம்.” என்று அரவிந்த் டிவியை பார்க்க அமர்ந்தான். பொம்மு டிவியை ஆன் செய்ய நெருங்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
“அட ச்சே...இந்த கரெண்ட்டு  இப்பதான் போகனுமா?” என்று அரவிந்த் வெறுப்பாக கூறினான்.
“அரவிந்த்..இந்த டிவி பட்டனை அமுக்குனா என்ன தெரியும்?” - பொம்மு.
“நிறைய நிகழ்சிகள் பாக்கலாம்...பாடுவாங்க..ஆடுவாங்க!” – அரவிந்த்.
“ஓ...இதுதானா?...இதுக்கு எதுக்கு டிவி? நானே இதை நடத்தி காட்டுவேனே...” – பொம்மு.
“ஓ...சரி சரி...இப்ப பாட போறியா? இல்ல ஆட போறியா?” – அரவிந்த் உற்சாகமா.
“நான் பாட போறேன்....அவங்க ஆடுவாங்க....”என்றது  பொம்மு சிரித்தபடி.
“என்ன சொல்ற புரியலேயே?” – அரவிந்த்.
“இப்போ பார்” என்று பொம்மு ஜன்னல் பக்கம் அமர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் பாட்டுக்கு அந்த அறையில் இருந்த எல்லா பொருட்களும் ஆட ஆரம்பித்தன. இந்த மாயாஜாலத்தை கண்டு அரவிந்த் வாயை பிளந்தான். சிறிது நேரம் அவள் பாட்டை கேட்ட அவனும் உடனே ஆட ஆரம்பித்தான். வீடே சந்தோஷமாக தெரிந்தது. அப்போது அருகில் இருக்கும் ஜன்னல் பக்கம் வெளியே பொம்மு பார்த்தபோது தெருவில்  அந்த கருப்பு  நாய் அவளையே கவனித்து கொண்டிருந்தது. பொம்மு மனதில் எதோ ஒரு நியாபகம் மின்னலாக வந்து மறைந்தது.
                                  ***
“இந்த பொம்மையதான் நான் குப்பைல போட்டேனே...ஏன் இத மறுபடியும் கொண்டு வந்த?” – தேவி
“இல்லமா...இந்த பொம்மை மேல எந்த தப்பும் இல்ல....இது இனிமே என்கூட தான்  இருக்கும்.” – அரவிந்த்
அன்றிலிருந்து அரவிந்தின் சந்தோஷக் காலம் ஆரம்பித்தது. பொம்மு அரவிந்தை தவிர மற்ற எல்லோருக்கும்  பொம்மையாக நடித்து வந்தாள். அவள் செய்யும் மாயாஜாலங்களுக்கும் குறும்புகளுக்கும் அளவே இல்லை. அரவிந்த் பொம்முவுடன் அவன் வாழும் சென்னையை சுற்றி காட்டினான். அவளுக்கு தெரியாத விஷயங்களை சொல்லி கொடுப்பான். சஞ்சய்யை குறிந்து அவன் கண்ணில் படாமல் நிறைய குறும்பு செய்வாள் பொம்மு. வீட்டு வேலைகளை சலிக்காமல் செய்வாள். அதிசய பொம்முவும் அரவிந்த் நெருங்கிய நட்பில் இருந்தனர்.
ஒருநாள் அரவிந்த் பொம்முவை கையில் வைத்து கொண்டு வெளியே உல்லாசமாக சென்று வர கிளம்பினான். அரவிந்த் பொம்முவுடன் தன் வீட்டின் அருகில் இருக்கும் மாந்தோப்பின் பக்கம் சென்றான்.
“ப்பா...எவ்வளோ மாங்காய்...ஒன்னு பறிக்கலாமா? ” – பொம்மு.
“ஒரு பொம்மைக்கு இதெல்லாம் ஓவர் ஆசை. தோட்டக்காரன் உள்ள எங்காவது உள்ள இருப்பான். மாட்டினோம்னா மரத்தில கட்டிவச்சுடுவான்.” – அரவிந்த்.
“என்னால சாப்பிட முடியாதுதான். ஆனா வாசனைதான் என்னோட உணவு...தயவு செஞ்சு பறிச்சு தாயேன்” – பொம்மு.
“முடியாது!” – அரவிந்த்.
“முடியாதா?...அப்போ சரி. நான் வந்த வழியில் திரும்பி போறேன். வழியில வர்றவங்க எல்லார்கிட்டயும் பேசறேன். எல்லோரும்  அலறி ஓடப் போறாங்க..கிளம்பிட்டுமா?” என்று பொம்மு வந்த பாதை பக்கம் திரும்பினாள்.
“ஏய்..அப்படி செஞ்சுடாதனு உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன்!” – அரவிந்த் பதறியபடி.
“அப்போ எனக்கு மாங்காய் பறிச்சு போடு!” – பொம்மு பாடியபடி.
அரவிந்த் வேண்டாவிருப்பமாக மாந்தோப்பில் பொம்முவுடன் மெல்ல நுழைந்தான் மெல்ல சுற்றி பார்த்தபோது அங்கே தோட்டக்காரன் இல்லை.
“ம்ம்..சீக்கிரம் மரத்துல ஏறு!” – பொம்மு
“இரு “ என்று அரவிந்த் நொடிக்கு ஒருதடவை பார்த்து ஒரு மரத்தில் ஏற ஆரம்பித்தான். ஏறமுடியாமல் சருகினான். மீண்டும் ஏறினான். மீண்டும் வழுக்கியது. இப்படியே செய்துக்கொண்டிருந்த போது.
“டேய்...நீ ஏறமாட்டே.” என்று பொம்மு குரல் கொடுத்தாள். அரவிந்த் மரத்தின் மேல் பார்த்தபோது பொம்மு மரத்தில் எப்போவோ ஏறி அமர்ந்திருந்தாள்.
“ஏய்.ஏறிட்டியா?” – அரவிந்த் ஆச்சர்யமாக.
“ஆமா...நீ நாளைக்கு தான் ஏறுவனு புரிஞ்சிகிட்டேன்..நானே பறிச்சு போடுறேன்!” – பொம்மு கிண்டலாக.
“நான் எல்லா மரத்திலும் ஏறுவேன்..ஆனா மாமரத்தில ஏறினதில்ல..அதான்...சரி சரி ..மாங்காய் பறி..சீக்கிரம்” – அரவிந்த்.
 பொம்மு ஒரு மாங்காயை பறித்து கிழே போட்டாள்.
“இது உனக்கு...ஆனா எனக்கும் வேணுமே”  என்றான் அரவிந்த் மாங்காயை. எடுத்தபடி.
பொம்மு இன்னொரு மாங்கையை பறித்து போட்டாள்.
“ஒன்னுனா ஒண்ணுதான் பறிப்பியா?” – அரவிந்த்..
பொம்மு மாயாஜாலம் செய்ய உடனே மரத்திலிருந்த அத்தனை மாங்காய்களும் கிழே விழுந்தன. அரவிந்த் அதிர்ந்து போனான். பொம்மு சிரித்து கொண்டு இருந்தாள்.
“அட குரங்கே...இப்படி பண்ணிட்டியே...வா ஓடிடலாம்.” என்று அரவிந்த் பதறி ஓட ஆரம்பித்தான்.
பொம்மு சிரித்துக் கொண்டே கிழே குதித்தாள். அவள் சட்டென மாந்தோப்பை கண்ட போது அங்கே தூரத்தில் ஒரு மாமரம் பக்கத்தில் தெருவில் அவள் கண்ட அதே கருப்பு நாய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. பொம்மு முகத்தில் சிரிப்பு மறைந்தது. அவளுக்கு ஏதோ நியாபகம் வருவது போல் இருந்தது. அவள் நினைவுகளில் ஏதோ ஒரு போர்களத்தில் அவள் நிற்பதுபோன்ற நியாபகம் அது.
“ஏய்..பொம்மு சீக்கிரம் வா....” என்று பொம்முவை தூக்கிகொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தான் அரவிந்த். பொம்முவின் பார்வை அந்த நாய் மேல்தான் இருந்தது. நீல வானம் மழை மேகங்களால் கருப்பாக மாற ஆரம்பித்தது.
                                              ***


இரவு வந்தது. மழை தூறல் பொழிந்து கொண்டிருந்தது. அரவிந்த் அவன் அறையில் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். சட்டென பொம்முவை கவனித்தான். அன்று முழுவதும் பொம்மு எதையோ யோசித்தபடியே இருந்தாள்.
“என்னாச்சு பொம்மு..என்ன யோசிக்கிற?” என்று அரவிந்த் டிவியை ஆப் செய்தான்.
“இல்ல... ஒரு கருப்பு நாயை அடிக்கடி பாக்குறேன். அதை பாக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு நியாபகம் எனக்கு வருது..” – பொம்மு அமைதியாக.
“என்ன நியாபகம்?” – அரவிந்த்.
“நான் ஒரு போர்களத்துள நிக்குறேன்...என்னை சுற்றி பயங்கரமா சண்டை நடக்குது...மணல் காத்து அங்க வீசுது...” – பொம்மு யோசித்தபடி.
“இது உன் கற்பனையா இருக்கும்..அது வெறும் தெரு நாய்...“  - அரவிந்த்.
இல்ல. அந்த நாய் மேல எனக்கு எதோ ஒரு சந்தேகம்..” – பொம்மு.
 “என்ன பேசுற நீ?..நாய்கள் நம்மை பாக்குறது சாதாரண விஷயம்” – அரவிந்த்.
“இந்த நாய உனக்கு எத்தனை நாளா தெரியும்?” – பொம்மு
“அந்த நாய கொஞ்ச நாளாதான் பாக்குறேன்” – அரவிந்த்.

பொம்மு யோசிக்க ஆரம்பித்தாள். அதே நேரம் வெளியே மழையில் அந்த தெருவில் ஒரு காரின் அடியில் அந்த நாய் படுத்திருந்தது. அதன் பார்வை அரவிந்த் வீட்டு ஜன்னல் பக்கம் தான் இருந்தது.

No comments:

Post a Comment